கோவை/ திருநெல்வேலி: கோவை, நெல்லை மேயர்கள் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்பனா ஆனந்தகுமார் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், பொறுப்பேற்றதுமுதலே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மக்களவை தேர்தல் முடிந்ததும் கோவை மேயர் மாற்றப்படுவார் என்று தகவல்கள் பரவின.
இந்நிலையில், கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, தனது உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் நேற்று ஒப்படைத்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறும்போது, ‘‘உடல்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக மேயர் தெரிவித்துள்ளார். வரும் 8-ம் தேதி சிறப்பு மன்றக் கூட்டம் நடத்தப்பட்டு, அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்றார்.
ராஜினாமா பின்னணி என்ன?- ஒப்பந்தங்கள் மற்றும் திட்டப் பணிகளில் தலையிடுவது, மேயரின் நிர்வாகத்தில் அவரது கணவர் ஆனந்தகுமாரின் தலையீடு என தொடர்ந்து மேயர் மீது புகார்கள் எழுந்தன. மேலும், மேயரின் தாய் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண், மேயர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தார். மன்றக் கூட்டங்களிலும் மேயருக்கு எதிராக மண்டலத் தலைவர்களே குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மேலும், கோவை மாநகராட்சியில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
மக்களவை தேர்தல் பணிகளில்மேயர் செயல்பாடுகள் சரியில்லாததால், அண்ணாமலைக்கு அதிகவாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இதெல்லாம்தான் அவரது பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
நெல்லை மேயர்.. இதேபோல, நெல்லை மேயர் பி.எம்.சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பியுள்ளார்.
மேயர் சரவணன் உட்பட திமுக கவுன்சிலர்கள் அனைவருமே, திமுக முன்னாள் மத்திய மாவட்டசெயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் சீட் வாங்கியவர்கள். ஆனால், சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவியது.
திமுக கவுன்சிலர்களில் பலரும்அப்துல் வகாபுக்கு விசுவாசமாகவே இருந்துள்ளனர். அவர்கள் மாநகராட்சி கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சுநடத்தியும், பிரச்சினை தீரவில்லை. இந்த விவகாரத்தில் அப்துல் வகாபின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அதேபோல, திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர், கவுன்சிலர் இந்திரா மணியின் கணவரும், திமுக பிரதிநிதியுமான சுண்ணாம்பு மணி ஆகியோர் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக கவுன்சிலர்கள் 38 பேர், கடந்த ஆண்டு டிச. 7-ம் தேதி கடிதம் கொடுத்தனர். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை, அனைத்து கட்சி கவுன்சிலர்களும் புறக்கணித்ததால், சரவணனின் மேயர் பதவி தப்பியது. இந்த நிலையில், தொடரும் பனிப்போர் எதிரொலியாக, மேயர் பதவியை சரவணன் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
கட்சித் தலைமை அறிவுறுத்தல்? கோவை, நெல்லை மேயர்களின் செயல்பாடுகளில் திமுகதலைமை அதிருப்தி அடைந்ததாகவும், தொடர் புகார்கள் காரணமாக, இருவரையும் ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாகவும், இதன் காரணமாகவே இருவரும் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டிஇடைத் தேர்தலுக்கு பிறகு, மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.