கோவை, மதுரை மெட்ரோ ரயில்: “மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியோடு அணுகுகிறது” – டிடிவி தினகரன் | Coimbatore, Madurai Metro Rail: “It seems like central government is approaching it with a vengeance” – TTV Dinakaran

Spread the love

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம். அதில், வாக்காளர்கள் யாருடைய பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டு இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்து விடலாம்.

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். மத்திய அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுக் கொள்வதுதான் நன்றாக இருக்கும். இது, விவசாயிகளின் கோரிக்கை, தி.மு.க-வின் கோரிக்கை அல்ல. அதை மத்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கும், கோவைக்கும் வருவதற்கு அனுமதி தராமல் இருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனச் சிலர் சிரிப்பாகக் கூறுவது கண்டனத்துக்குரியது.

நம் நாட்டில் 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். அது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியாக இருக்கும். போதைப்பொருள் பழக்கவழக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது, கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், துரிதமாகச் செயல்பட்டு தடுக்கவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை கூட்டணி அமைத்தவுடன் சொல்வதுதான் நாகரிகமாக இருக்கும். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். அதற்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க-வினருக்கு த.வெ.க என்றால் ஒரு உறுத்தலாக இருக்கிறது என்பதை அவர்களது பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். இந்த முறை அ.ம.மு.க பங்கேற்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *