கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டன. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டதாம்.
முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்ப்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலிலிருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது.
இந்தக் கோயிலுக்கு இடப்புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப் பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். உச்சியில் கொங்கணவர் கோயிலில், கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சித்தர்பெருமான்.
கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை’ உள்ளது.

சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி ஆகிய நாள்கள் சித்தரைத் தரிசிக்க விசேஷமானவை.
பௌர்ணமி நாள்களில் 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
இனிப்பைத் தவிர ஐந்து வகை ருசியுடன் திகழும் இந்தத் தீர்த்தம் அற்புத மருந்து; இது, முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானது, தற்போது அந்த அளவுக்கு மூலிகைகள் கிடைப்ப தில்லை என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகினாலும் ஒட்டுமொத்தகளைப்பும் நீங்கிவிடுமாம். பக்தர்களுக்குப் பசியாற பச்சைப்பயிறு சாதம் வழங்கப்படுகிறது.
இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். தைப்பூச நன்னாளில் இந்த மலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது விசேஷம்.
வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை ஊதிமலை சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். முருகன் அருளும் கொங்கணவரின் குருவருளும் கைகூடி, மலை போல் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.