மலையில் உள்ள ஒரு குகைக்குள் சந்நிதி கொண்டிருக்கும் பாம்பாட்டிச் சித்தர். வலது கையில் மகுடியோடும் இடது கையில் தடியோடும் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது. இந்தச் சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் நாகத்தின் வடிவம் தெரிகிறது.
பாறையில் தெரியும் அந்த வடிவத்திலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். முருகனுக்குப் பூஜைகள் முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கு பாம்பாட்டிச் சித்தர் இன்றும் முருகனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதிகம். சித்தர் சந்நிதியில் இரவு நேரத்தில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் காலையில் பால் குறைந்திருக்குமாம். பாம்பாட்டிச் சித்தர் இந்தப் பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்துவதாக நம்பப்படுகிறது.

மனநிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. எந்தவிதமான மனச் சிக்கலாக இருந்தாலும் மருதமலை முருகப்பெருமானைத் தரிசித்தால், அது உடனே பறந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம். நாக தோஷம் உள்ளவர்களும், விஷக்கடிக்கு ஆளானவர்களும் இங்கு வந்து பாம்பாட்டிச் சித்தரின் அலங்காரத்துக்குப் பயன்படுத்திய விபூதியை நீரில் கலக்கிப் பருகினால், பிரச்னைகள் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல் நிறைவேறிவிட்டால், பாம்பாட்டிச் சித்தரின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர் சூட்டி, இனிப்பான உணவு வகைகளை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.
மருதமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று பால் அபிஷேகமும், தைப்பூசத்தையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும். பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும், மாலையில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்.