கோவையில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவத்தில், அது கவரிங் நகை என்று மூதாட்டிக் கூறி சிரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் வசிப்பவர் கலாமணி (60). இவர் தனது உறவினர் வீட்டுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலாமணி அணிந்திருந்த செயினை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலாமணி அவர்களை பிடியுங்கள் பிடியுங்கள் என உரக்க கூறியுள்ளார்.
அப்பகுதி இளைஞர்கள் இருசக்கர வாகன திருடர்களை துரத்தினர், ஆனால் பிடிக்க முடியவில்லை. அங்கு வந்து பார்த்தபோது கலாமணி மீண்டும் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இது பற்றி கேட்டவுடன் அவர் போனால் போகுது அது கவரிங் நகை தானே என கூறியதும் துரத்திச் சென்ற இளைஞர்கள் சிரித்தபடி, தங்கள் துரத்திக்கொண்டு ஓடியதை எண்ணி அங்கிருந்து சென்றனர்.