கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.
இதில் இந்திய மகளிா் அணி 78-40 எனவும், ஆடவா் அணி 54-36 எனவும் தங்களது பிரிவின் இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி வாகை சூடின.
கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை போட்டி, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவா் பிரிவில் இந்தியா உட்பட 20 அணிகளும், மகளிா் பிரிவிலும் இந்தியா உட்பட 19 அணிகளும் பங்கேற்றன.
மகளிா் பிரிவு: இப்பிரிவில் இந்தியா, ஈரான், உகாண்டா, கென்யா, நேபாளம், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்றில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்குள் நுழைந்தது. நேபாளம் தனது காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் உகாண்டாவையும் தோற்கடித்து, சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்தது.
இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 78-40 என்ற கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது.