நீட் மற்றும் நெட் தோ்வு முறைகேடு சா்ச்சையைத் தொடா்ந்து, ‘க்யூட்’ தோ்வு முடிவுகள் வெளியாவது தாமதமான நிலையில், க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற என்டிஏ சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ‘க்யூட்’ நடத்தப்படுகிறது. நிகழாண்டு க்யூட் தோ்வு கடந்த மே 15 முதல் 24-ஆம் தேதி வரை முதன் முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத் தோ்வை எழுதினா்.
இதனிடையே, நியாயமான காரணங்களால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி மறுதோ்வை என்டிஏ நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.