சென்னை: பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக பிஹார் நோக்கி புறப்பட்ட சங்கமித்ரா விரைவு ரயிலில் இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. தாயையும், குழந்தையும் ரயில்வே போலீஸார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்டு, சென்னை – ராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மஜாகர் அலி. இவரது மனைவி மேத்தா காத்துன். இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேத்தா காத்துன் 4-வது குழந்தையின் பிரசவத்துக்காக, தனது 3 குழந்தைகளுடன் தனியாகவே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, பெங்களூருவில் இருந்து பிஹார் மாநிலம் தானாபூர் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலில் பொது பெட்டியில் தனது 3 குழந்தைகளுடன் மேத்தா காத்துன் பயணித்தார். அவரை மஜாகர் அலி வழியனுப்பி வைத்தார்.சனிக்கிழமை காலை இந்த ரயில் புறப்பட்டு, காட்பாடி, அரக்கோணம் நிலையத்தை கடந்து வந்தபோது, மேத்தாகாத்துனுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவர் அலறி துடித்தார்.
அவருக்கு சக பெண் பயணிகள் உதவினர். மேலும், இது தொடர்பாக, ரயில்வே உதவி எண் மூலமாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில், பெரம்பூர் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேளாங்கண்ணி மற்றும் ரயில்வே காவல் பெண் போலீஸார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தயாராக இருந்தனர்.
இதற்கிடையில், இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, மேத்தா காத்துக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்கு ஏற்கனவே, தயாராக இருந்த ரயில்வே பெண் போலீஸார் அங்கு விரைந்து சென்று மேத்தாகாத்துனையும், பிறந்த குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, அங்கு மருத்துவ செவிலியர், மருத்துவ பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மேத்தாகாத்துன் மற்றும் பச்சிளம் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, தாயையும், குழந்தையும் பத்திரமாக ஆம்புலன்சில் ஏற்றி, ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், குழந்தை பிறந்தது தொடர்பாக மஜாகர்அலிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். குழந்தையும், தாயையும் பாதுகாப்பாக அழைத்து சென்ற ரயில்வே போலீஸாரையும், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்களையும் பயணிகள் பாராட்டினர்.