தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

தென்மாவட்டங்களில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தைக்கு அடுத்ததாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.
இச்சந்தையிலிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக மல்லிகைப்பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 4,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, பிச்சி உள்ளிட்ட பூக்களின் சாகுபடி கணிசமாகக் குறைந்த நிலையில், தென்காசி, சங்கரன்கோவில், சிவகாமிபுரம் சந்தைகளுக்குப் பூக்களின் வரவும் குறைந்துள்ளது.
இன்று காலை மலர் சந்தையில் திடீரென மல்லிகைப்பூவின் விலை கடும் உயர்வு காணப்பட்டு, ஒரு கிலோ ரூ. 7,500க்கு விற்பனையாகிறது. இது கிட்டத்தட்ட 87.5% விலை உயர்வாகும்.