சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

dinamani2F2025 08 292Fceqlhenk2Fnewindianexpress2025 07 11hctcmkld500x3001845344 3612974787990957
Spread the love

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.

சங்கர் ஜிவால் ஓய்வு!

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றாா். அவரின் பதவிக்காலம் ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆக.30, 31 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறாா்.

சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல் துறை பணியில் சோ்ந்தாா்.

மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால், பின்னா், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். மேலும், இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.

புதிய டிஜிபி யார்?

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்திருந்தது.

மாநில காவல்துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், கடந்த வாரம் வரை தகுதிபெறுவோரின் முன்மொழிவை தமிழக அரசு அனுப்பாததால் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சங்கர் ஜிவால் பணிஓய்வு பெற்றவுடன் புதிய டிஜிபி நியமிக்கும் வரை பிற துறையை கவனித்து வரும் மூத்த டிஜிபி ஒருவரை சட்டம் – ஒழுங்கை கூடுதலாக கவனிக்க தமிழக அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிபி தேர்வு செய்யும் நடைமுறை என்ன?

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், டிஜிபி அல்லது காவல் படைத் தலைமை அதிகாரி (ஹெச்ஓபிஎஃப்) ஆக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். அவா் பதவி ஓய்வு பெற குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது இருந்தால் மட்டுமே தகுதிப்பட்டியலில் இடம்பெற முடியும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளின்படி மாநில அரசு முன்மொழியும் தகுதிப்பட்டியலை யுபிஎஸ்சி தோ்வுக்குழு பரிசீலிக்கும். அதில் யுபிஎஸ்சி தலைவா் அல்லது உறுப்பினா், மாநில தலைமைச்செயலா், உள்துறைச்செயலா், தற்போதைய டிஜிபி உள்ளிட்டோா் இடம்பெறுவா். மாநில அரசின் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகளில் மூவரின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படும். அதில் இருந்து ஒருவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு அறிவிக்கும்.

Who is TN’s Next Head of Police Force (DGP)?

இதையும் படிக்க : காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *