சங்க இலக்கியங்கள் உட்பட 1 லட்சம் புத்தகங்கள்: 12 கோடி பேர் பார்வையிட்ட டிஜிட்டல் மின் நூலகம் | digital e library visited by 12 crore people

1347732.jpg
Spread the love

சென்னை: சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின்னூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அங்கமாக இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் மொழியை டிஜிட்டல் காலகட்டத்துக்கு தடையின்றி தயார் செய்ய ஏதுவாக செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதன் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றான தமிழிணையம் – மின்னூலகம், சங்க இலக்கியம், தமிழ் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கணப் பிரதிகள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உலகளவில் அனைவரும் எளிதில் அணுக வழிவகை செய்கிறது.

அந்தவகையில் உருவாக்கப்பட்ட மின்னூலகத்தின் https://www.tamildigitallibrary.in/ இணையதளத்தில் 1 லட்சம் அரிய புத்தகங்கள், 8 லட்சம் ஓலைச்சுவடி பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 12 கோடி பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர். இதில் 45,045 புத்தகங்களை 31.52 லட்சம் பேரும், 31,258 பருவ வெளியீடுகளை 2.49 லட்சம் பேரும், 3,739 ஓலைச்சுவடிகளை 1.99 லட்சம் பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து 6,974 புகைப்படங்கள், 800 மணிநேர ஒலி-ஒளி ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மின்னூலகத்தை பயன்படுத்தும் வகையில் ஈ-பப், டெய்ஸி வடிவங்களில் (ஆடியோ புத்தகம்) கிடைக்க செய்வதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த மின்னூலகம் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற அமைப்புகளின் உதவியோடு தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *