சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

Dinamani2f2025 02 012fmh2qqrwp2fgitpjcxbuaa6cl.jpg
Spread the love

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.

51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அதேபோல, 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையும் தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

டெஸ்ட் போட்டிகளில் அவர் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அங்கம் வகித்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விருதினை சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிக்க: ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது. இதுவரையில் 30 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விருதினைப் பெறும் 31-வது நபராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *