சென்னை: தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் கடந்த செப்.24-ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கான எனது கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், பாமகவின் சட்டப்பேரவை குழுவுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க பேரவைத் தலைவர் அப்பாவு தொடர்ந்து மறுத்து வருகிறார். நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், அரசியல் காரணங்களுக்காக அறம் மற்றும் மரபுகளை மதிக்காமல் செயல்படுவது நியாயமல்ல. பேரவைத் தலைவரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
இனியாவது பேரவைத் தலைவர் அறத்துக்குப் பணிந்து நீதியை மதிக்க வேண்டும். அந்த வழியில் பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக சதாசிவம், கொறடாவாக சி.சிவக்குமார் ஆகியோரை அங்கீகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.