“சட்டப்பேரவையில் தமாகா குரல்…” – பொதுக்குழு கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு | tamil maanila congress leader GK Vasan slams dmk govt

Spread the love

பல்லாவரம்: பாஜக ஆட்சியின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, வருகின்ற தேர்தலில் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (அக் 25) பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக, வருகை தந்த ஜி.கே.வாசனுக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமாகா கட்சியின் கொடியை ஏற்றி, அவர் விழாவினை தொடங்கி வைத்தார்.

பின்னர், ஜி.கே. வாசன் தொண்டர்களிடையே பேசுகையில், “இந்த பொதுக்குழு கூட்டம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிப்பதற்கான முன்னோட்டம். இதனால், கட்சியினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணியை செய்து தமாகாவுக்கு மரியாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சிகளில் முதல் வரிசையில் அமரக்கூடிய அளவிற்கு தகுதி பெற்ற கட்சி தமாகா மட்டுமே. நம் கட்சியினருக்கு என்று ஓர் அரசியல் வரலாறு உண்டு.

இங்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் மூன்று தலைமுறையினருக்கு சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. காமராஜர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் இங்கு அமர்ந்திருப்பது பெருமை சேர்க்கிறது. நமது பணி மேலும் தொடர வேண்டும், சிறக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வெற்றிக்கு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். நமது வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதி எடுக்க வேண்டும். இதை நோக்கி தான் இந்த பொதுக்குழு.

மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வரும் தேர்தலில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமாகா மூன்று மாதங்களாக தேர்தல் வியூகம் அமைத்து கூட்டங்களை நடத்தி வருகிறது. நமது கூட்டணி நமது வேட்பாளர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். எனவே, வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற, அனைவரும் மத்திய அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தேர்தல் தொடர்பான முழு தீர்மான அதிகாரமும் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான மத்திய பாஜக அரசின் பொருளாதார வளர்ச்சி முயற்சிகளையும், ஜி.எஸ்.டி. கட்டமைப்பு சீரமைப்பையும், ஆபரேஷன் சிந்தூர் வழியாக தேசிய பாதுகாப்பு வலிமையை வெளிப்படுத்திய இந்திய ராணுவத்தையும் பொதுக்குழு பாராட்டியது.

தற்போதைய தி.மு.க. அரசு நான்கரை ஆண்டுகளில் மக்கள் நல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி, வரி உயர்வுகள், ஊழல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கி விட்டதாக கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதை மக்கள் மத்தியில் விளக்க கிராமம் முதல் நகரம் வரை பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

காவிரி, பவானி, முல்லைப் பெரியாறு போன்ற நதிகளில் தடுப்பணைகள் அமைத்து விவசாய வளர்ச்சி மேம்படுத்த வேண்டும் என்றும், நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டம் வலியுறுத்தியது. அரசு வேலைவாய்ப்பு காலியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை தேவை என்றும் தீர்மானிக்கப்பட்டது. மீனவர்கள் பாதுகாப்பு, ஜவுளித் தொழில் மீட்சிக்கு பாதுகாப்பு வாரியம் அமைப்பு, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு மேம்பாட்டு வாய்ப்புகள் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

பள்ளி – கல்லூரி துறையில் திமுக அரசு வெறும் அறிவிப்புகள் மட்டுமே செய்து நடைமுறையில் எதையும் செய்யவில்லை எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் சம்பளக் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சமீபத்திய மழை பாதிப்பால் இழப்பு அடைந்த விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்குழு கேட்டுக் கொண்டது. மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *