சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு  | TN Budget to be happened today

1354231.jpg
Spread the love

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தாக்கல் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்க ளவை தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. அன்று முதல்வர் ஸ்டாலின் பதில் உரை அளித்தார். அதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், “சட்டப்பேரவையின் அடுத்தகட்ட கூட்டம் மார்ச் 14-ம் தேதி தொடங்கும். அன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.அதைத் தொடர்ந்து 2025-26-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள், 2024-25-ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகள் மார்ச் 21-ம் தேதி தாக்கல் செய்யப்படும்” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார்.

அதன்படி, பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக அரசின் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது, நிதி அமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், பட்ஜெட்மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடி வெடுக்கப்படும்.

நாளை (மார்ச் 15) வேளாண் பட் ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து, 17-ம் தேதி முதல் விவாதம் தொடங்கும். இந்த விவாதம் 4-5 நாட்கள் நடைபெறலாம். இதுகுறித்த அறிவிப்பை பேரவை தலைவர் அப்பாவு இன்று வெளியிடுவார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 21-ம் தேதி தாக்கல் செய்வார். அன்று, பட்ஜெட் மீதான விவாதத்துக்கு தனது பதில்உரையையும் அவர் வழங்குவார். இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும். இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட இயலாது என்பதால், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். விடியல் பேருந்து பயண திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றையும் தாண்டி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுபட்ஜெட் தாக்கல்செய்யப்படும் நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத் துறை நேற்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது.

936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் மற்றும் நாளை தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில், காலை 9.30 முதல் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை (மார்ச் 15) காலை 9.30 மணி முதல் வேளாண் பட்ஜெட் தாக்கலும் எல்இடி திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதேபோன்று இதர 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்கள், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்கள் என மொத்தம் 936 இடங்களில் இன்று பொது பட்ஜெட் நிகழ்வும், நாளை வேளாண் பட்ஜெட் நிகழ்வும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *