சட்டப்பேரவையில் நடந்தது என்ன? – சபாநாயகர் அப்பாவு விளக்கம் | What happened in the Legislative Assembly? – Speaker Appavu

1345994.jpg
Spread the love

சென்னை: “சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலை. விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலை. வேந்தராக ஆளுநர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அவர்கள் யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (ஜன.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும். நாளை (ஜன.7) மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜன.8-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் நடைபெறும். ஜன.9 மற்றும் ஜன.10-ம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஜன.11-ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலுரை, அரசின் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், அரசின் பிற அலுவல்கள் குறித்து விவாதிக்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று நடந்த நிகழ்வு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலை. விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலை. வேந்தராக ஆளுநர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா? என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அவர்கள் யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் பேச எழுந்தபோதுதான், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பதாகைகளைக் காட்டினர்.

நானோ, முதல்வரோ பேசும்போது, அந்த பதாகைகளை அவர்கள் காட்டவில்லை. எனவே, அதற்கு என்ன அர்த்தம் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது. அதனால்தான்,உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல்,எந்த செய்தியையும் என்னை கேட்காமல் வெளியிட வேண்டாம், என்று கூறினேன். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம், கலவர நோக்கத்துடன் அதிமுக செயல்பட்டதால்தான், அவர்களை வெளியேற்றினோம்.

ஆளுநர் வெளிநடப்பு குறித்து அவை முன்னவர் கூறியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 (1)-ன்படி, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் படிக்க வேண்டும். எனவே, ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதுபோல் ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். அது தவறு என்பதை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து கண்டித்திருக்கிறோம்.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா,ஒடிசா உள்பட பல பகுதிகளை உள்ளடக்கியது மெட்ராஸ் பிரசிடென்சி. 1920-ல் சட்டமன்ற தேர்தல் நடந்து, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் 1921-ல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நடந்துவருகிற மரபுபடி, தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறது. எந்த ஆளுநரும் தேசியகீதம் முதலில் இசைக்க வேண்டும் என்பது போன்ற பிரச்சினையை உருவாக்கவில்லை.

1995-ல் முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும், என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, 1996-ல் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. ஆனாலும் சென்னாரெட்டி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டுத்தான் சென்றார்.

ஆளுநர் உரை நடைபெறுகின்ற அந்த நாள், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்த நாட்களின் கணக்கில் வராது. அன்றையதினம் சட்டமன்றம் நடந்ததாக கருதப்படாது. ஆளுநர்களின் கடமை அந்த உரையை வாசித்துவிட்டுச் செல்ல வேண்டும். அந்த உரிமையை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கருத்து சொல்வதற்கு எல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேர் மட்டும்தான், பேரவையில் கருத்து சொல்ல முடியும். மற்றவர்களுக்கு கருத்து சொல்லக்கூடிய உரிமை இல்லை.

உரையை வாசிக்க விருப்பமில்லாததால், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதை ஆளுநர் ஒரு சாக்கு போக்காக கூறி வருகிறார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். பேரவைக் கூட்டத்தொடருக்கு அழைக்க சென்றபோது ஆளுநர் சிறப்பான முறையில் உபசரித்தார். அப்போது எந்தவித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை. பேரவையிலும் சட்டத்தின்படி, ஆளுநருக்கு தர வேண்டிய அனைத்து மரியாதைகளும் தரப்பட்டன. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, செயல்படுவது நியாயமா என்பதை நீங்கள்தான் கூற வேண்டும்,” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *