சென்னை: சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததை அடுத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் அன்போடு அமைதியோடு பேசக்கூடியவர். அவர் கோபமாகப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அவர் விமர்சனங்களை செய்யும்போதுகூட பொறுமையாக அமைதியாகத்தான் பேசுவார். வெளிநடப்பு செய்யும்போதுகூட சிரித்துக்கொண்டே யாருக்கும் எந்த கோபமும் வராத வகையில் அணுகக்கூடியவர். (அவையில் சிரிப்பலை)
அப்படிப்பட்ட ஒரு சிறந்த அரசியல்வாதியாக விளங்கிக்கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரன், 64 முடிந்து 65வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். (அவையில் சிரிப்பலை)
அவருக்கு எனது சார்பில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய முத்துசாமி அவர்களுக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, பேரவை சார்பில் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.