இந்த சம்பவம் குறித்து டோட்டல் எனர்ஜிஸ் எதையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால், அதானி க்ரீன் எனர்ஜி குழுமத்தின் சிறிய பங்குதாரர்களின் நலன் மட்டுமே மிக முக்கியம் என்றும் கூறியிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனத்தில், டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் மேற்கொள்ளவிருந்த 50 பில்லியன் டாலர் பசுமை ஹைட்ரோஜன் முன்னெடுப்புத் திட்டத்தில் இணையும் முயற்சியை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் மூலதனம் திரட்டியதாக, அமெரிக்க நீதிமன்றத்தில், கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஏராளமான முதலீட்டாளர்களும், தொழில் கூட்டாளிகளும் வணிகத்தைத் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறார்கள் என்கின்றன உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்.
அதுமட்டுமல்லாமல், கௌதம் அதானியுடன் தொழிலில் இணைந்திருக்கும் உலகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மீதும் ஊடக வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. ஆனால், வழக்கில் கூறப்பட்டிருப்பது போன்ற எந்த தவறையும் தங்கள் நிறுவனம் செய்யவில்லை என்று அதானி குழுமும் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2023ஆம் ஆண்டு ஹிண்டர்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை விடவும், தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு சற்று மிகவும் தீவிரமானது.
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வசம் உள்ள அதானி குழும நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல டாலர் மதிப்புள்ள பத்திரங்கள், அதன் மீது எதிர்மறை தாக்கங்களால், மதிப்பீடு கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது, அதாவது அதன் பத்திரங்கள் மதிப்பு குறைக்கப்படலாம். இதன் காரணமாக, இந்த பெருநிறுவனம் பல்வேறு நிதிசார்ந்த அபாயங்களை சந்திக்க நேரிடலாம்.
கடந்த வாரம், அதானி குழும பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்து, அதிக பங்குகள் விற்பனைக்கு வந்தது. மேலும், கென்ய அதிபர் வில்லியம் ருடோ, அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த விமான நிலையம் மற்றும் மின்துறை தொர்பான 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.