அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (ஆகஸ்ட் 16) தொடங்கியது. இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய விஷ்மி குணரத்னே சதம் விளாசி அசத்தினார். அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெரேரா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அலானா டால்ஸெல் மற்றும் அர்லின் கெல்லி தலா 2 விக்கெட்டுகளையும், அலைஸ் டெக்டார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்குகிறது.