சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநில எல்லைக்குள் ரூ.2 ஆயிரம் கோடி அடுக்குமாடி திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்திருப்பது திட்டமிட்ட ஊழல் என பாமக, பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி: ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில எல்லைக்குள் ரூ.2 ஆயிரம் கோடியில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக தமிழக அரசு அளித்த விளக்கமும் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை உறுதி செய்கிறது.
சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவற்றை அழிப்பது கண்டிக்கத்தக்கது. ராம்சார் தலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று விதி இருக்கும் நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ அமைப்பும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்திருப்பதன் மர்மம் என்ன? பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
தமிழக பாஜக மாநில செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: சதுப்பு நிலத்துக்கு வெளியே உள்ள 1,359 ஏக்கர் நிலத்தை கண்டறிந்து அனுமதி வழங்கிய விவகாரத்தில் தமிழக அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, சிஎம்டிஏ போன்றவற்றில் சட்டவிதிமீறல்களால் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் சதுப்புநிலக் காடுகளை காக்கும் வகையில் தமிழக சதுப்புநில மீட்பு ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.