சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் – அதிகாரிகள் ஆய்வு | Flooding in streams along Chathuragiri mountain trail

1343227.jpg
Spread the love

வத்திராயிருப்பு: கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் நீர் வரத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை, மலட்டாறு, அத்தியுத்து, சங்கிலிபாறை ஆகிய ஓடைகளை கடந்து சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். சதுரகிரி மலையில் 2015-ம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின், அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை தடைவிதித்தது. வியாழன் இரவு முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் கட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் பேரிடர் மேலாண்மை அதிகாரி கணேஷ் தலைமையில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல், பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் நீரின் அளவு குறித்து ஆய்வு செய்தனர். அதிக வெள்ளம் காரணமாக மாங்கனி ஓடையை தாண்டி செல்ல முடியவில்லை. வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *