கருடா ஏரோஸ்பேஸ் – ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம்
ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார்.
ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார்.