சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை – பின்னணி என்ன?

Spread the love

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம் என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு அண்மையில் வந்தபோது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் 42 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, தலமலை,கோ்மாளம் மற்றும் ஆசனூா் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சார்பில் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், விடுதி உரிமையாளா்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களையும் சமா்ப்பிக்கவில்லை.

நீதிமன்றம்

நீதிமன்றம்

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கோ்மாளம், தலமலை மற்றும் ஆசனூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,சம்பந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் உரிய பதில் தராததால், 42 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதி உரிமையாளா்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிய அனுமதியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *