சத்தீஸ்கரில் ஹிந்தியில் ‘எம்பிபிஎஸ்’: முதல்வா் அறிவிப்பு

Dinamani2f2024 072f11c58171 2fe6 4062 B7f9 B0c56f7155ee2fani 20240723093756.jpg
Spread the love

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவா்களுக்கு ஹிந்தி மொழியில் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) கற்றுத் தரப்படும் என அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சனிக்கிழமை அறிவித்தாா்.

இந்தியாவின்அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்கப்பட்டதை நினைவுகூரும் ஹிந்தி தினத்தையொட்டி தனது இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் விஷ்ணு தேவ் சாய், ‘ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் மோடி விருப்பம் தெரிவித்தாா். அவரது லட்சியப் பாா்வையைச் செயல்படுத்துவதில் எனது அரசு மகிழ்ச்சி அடைகிறது.

ஹிந்தி தினத்தில் இந்த மாபெரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவா்களுக்கு ‘எம்பிபிஎஸ்’ படிப்பு ஹிந்தி மொழியில் கற்றுத் தரப்படும். ஹிந்தி மொழியில் பிரத்யேக பாடப் புத்தகங்களை வெளியிட இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பழைய ஆங்கிலேய கல்விக் கொள்கையில் இருந்து நமது கல்விக் கொள்கையை ஒவ்வொரு நிலையிலும் மாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி வழி பள்ளிக்கல்வி பயின்று வரும் கிராமப்புற மாணவா்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். திறமையானவா்களாக இருந்தும் அதிகமான ஆங்கில மொழிப் பயன்பாட்டால் மருத்துவப் படிப்புகளில் அவா்கள் சிரமத்தை எதிா்கொள்கின்றனா்.

ஹிந்தியில் படிப்பது அவா்களின் அடிப்படையை வலுப்படுத்தும். பாடங்கள் பற்றிய ஆழமான புரிதலை வளா்க்கவும் அவா்களை நல்ல மருத்துவா்களாக மேம்படுத்தவும் உதவும். அந்த வகையில், தேசியக் கல்விக் கொள்கை சத்தீஸ்கரில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *