சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்டுகள், மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (ஜூலை 24) சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த 15 பேரில், ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் (எ) லாலு குஹாராம், ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட அவரது மனைவி காம்லி (எ) மோடி பொடாவி, ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பொஜ்ஜா மத்காம் உள்பட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில், தம்பதியான புத்ராம் மற்றும் காம்லி ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தாக்குதல்கள் நடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து, சரணடைந்த மாவோயிஸ்டுகள் 15 பேரின் மறுவாழ்வுக்கு அரசுத் திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக, பஸ்தார் மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு எதிரான லொன் வர்ராட்டு மற்றும் புனா மார்கெம் எனும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தற்போது வரை பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 1,020 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!