சந்திப்பும் சிந்திப்பும்: பெண்ணின் வலிமை எதில் இருக்கிறது? – Kumudam

Spread the love

ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவம், அதிர்ச்சியை விட பெரும் கவலையை உருவாக்குகிறது. தன் காதலன் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டான் என்பதற்காக, அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை செலுத்திய இளம்பெண்ணின் செயல்எந்த உணர்ச்சியாலும், எந்த வலியாலும் நியாயப்படுத்த முடியாத கொடூரமான குற்றம்.

காதல் தோல்வி, நிராகரிப்பு, அவமானம் எதுவாக இருந்தாலும், வன்மம் அதற்கான பதிலாக இருக்க முடியாது. குறிப்பாக, ஒரு பெண் அந்த எல்லையைத் தாண்டிச் செல்வது சமூகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் நம் ஒவ்வொருவரையும் ஆழமாகச் சிந்திக்க வைக்க வேண்டிய விஷயம்.

பெண்கள் என்றாலே மென்மையானவர்கள். பொறுமையின் உருவம் என்ற ஒரே மாதிரியான சித்தரிப்பும் தவறு. அதே நேரத்தில், “பெண் என்றால் பேயும் இறங்கும்” என்று பெண்களை வன்மத்தின் உருவமாகச் சித்தரிப்பதும் ஆபத்தானது. பெண்கள் வன்மத்துக்குச் செல்லவே கூடாது. அதற்கான எண்ணமே உருவாகாத சமூகச் சூழலை உருவாக்குவதே நம்முடைய பொறுப்பு.

இத்தகைய கொலைபாதக எண்ணங்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை நேர்மையாகப் பார்க்க வேண்டிய நேரம் இது. பல தொலைக்காட்சி சீரியல்களில், பெண்கள் தொடர்ந்து வில்லிகளாகவும், சூழ்ச்சியாளர்களாகவும், பழிவாங்கும் முகங்களாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள். “ஏமாற்றப்பட்ட பெண் பழிவாங்க வேண்டும்; அழித்தொழிக்க வேண்டும்” என்ற எண்ணம் வலிமையாக மெருகேற்றப்படுகிறது. அதேபோல், சீரியல் கில்லர் தொடர்கள், குற்றத்தைத் தடுக்கும் விழிப்பு உணர்வை விதைப்பதற்குப் பதிலாக, சில மனங்களில் “இப்படியும் செய்யலாம்” என்ற தவறான கற்பனையை விதைத்து விடுகின்றன.

ஆனால் இதையெல்லாம் விட ஆழமான ஒரு புறக்கணிப்பு இருக்கிறது. காதல் தோல்வியடைந்த பெண்களின் மனவலி பேசப்படுகிறதா? அவர்களுக்கான மனநல ஆதரவு, ஆலோசனை, பாதுகாப்பான உரையாடலுக்கான வாய்ப்புகள் உண்மையில் உள்ளனவா? இல்லவே இல்லை.

அந்தப் பேசப்படாத வலி, அடக்கப்பட்ட கோபமாக மாறுகிறது. அந்த கோபம் தவறான திசையில் வெடிக்கும்போது. அது அந்தப் பெண்ணையும் அழிக்கிறது: மற்றவர்களையும் பாதிக்கிறது.

இந்தச் சம்பவம் ஒரு கடும் எச்சரிக்கை. பெண்களின் வலியை அலட்சியப்படுத்தக் கூடாது. அதே நேரத்தில், எந்த நிலையிலும் பெண் வன்மத்துக்குச் செல்லக் கூடாது என்பதையும் ஒவ்வொரு பெண்ணும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்ணின் வலிமை என்பது பழிவாங்கலில் இல்லை. தன்னை அழிக்காத, மற்றவர்களையும் அழிக்காத தீர்வைத் தேர்ந்தெடுப்பதில்தான் அந்த வலிமை இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *