முடி மாற்று அறுவைச் சிகிச்சை என்பது சமீப ஆண்டுகளில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே முடி மாற்று மற்றும் லேசர் தொழில்நுட்ப தோல் சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் நடைமுறையில் நடப்பது அப்படியல்ல, யார் யாரோ இதை தொழிலாகவே எடுத்துக்கொண்டு களமிறங்கி விட்டார்கள்.
’10 நாட்களில் உங்கள் வழுக்கைத் தலையில் முடி!’ ‘வழுக்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!’ இப்படி சமூக வலைதளங்களைத் திறந்தாலே வழுக்கை விளம்பரங்கள் வழுக்கி வருகின்றன.
இளம் வயதில் வழுக்கை அதிகரித்து வருவது உண்மை தான். ஆனால் அதைவிட வேகமாக அதிகரிக்கிறது அதை சரிசெய்கிறேன் என்று இறங்கியிருக்கும் வியாபாரக்கூட்டம்.இளைஞர்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி ‘அழகு முதலீடு’ என்ற பெயரில் செலவாகிறது. முயல் ரத்த எண்ணெய் முதல் முடி மாற்று அறுவைச் சிகிச்சை வரை எதையும் இவர்கள் முயற்சிக்கத் தயங்குவதில்லை. நடுத்தர வயதினரும் இதற்கு விதிவிலக்கல்ல.
வழுக்கை இல்லாதவர்களுக்கு கூட ‘நாளை நமக்கும் வந்துவிடுமோ?’ என்னும் பயத்தை உருவாக்கி, ஆசை காட்டி, கவர்ச்சியான விளம்பரங்களால் வலைவீசும் கூட்டத்துக்கு இங்கு குறைவில்லை. முதலில் இளைஞர்களை குறிவைத்த இந்த சந்தை, இப்போது இளம்பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது.
பெண்களின் முன்நெற்றி வழுக்கையை சரிசெய்து முழு மாற்றம் அளிக்கலாம் என்கிற விளம்பரங்கள் பரவலாக வருகின்றன. தோற்றத்தை அழகுப்படுத்திக் கொள்கிறோம் அவ்வளவுதானே? என்று சொல்லி விட முடியாத ஒரு ஆபத்தான போக்கு இது.
வாழ்க்கை முறை, பரம்பரை, மோசமான பராமரிப்பு, மருத்துவ காரணங்கள் இவைதான் வழுக்கைக்கு முக்கிய காரணம். இவற்றை சரிசெய்தாலே பெரும்பாலான பிரச்னைகள் சரியாகிவிடும். இவை எல்லாம் மீறி முடி மாற்று சிகிச்சை தான் தேவை என்றால் அதற்காக அங்கீகரிக்கப்பட்ட சரும பராமரிப்பு மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை அணுகுவது தான் பாதுகாப்பானது.
ஏன் இந்த அழக குறித்த தகவல் என்று கேட்கலாம். முடி மாற்று சிகிச்சையை மருத்துவம் அல்லாதவர்களும் செய்து வருவதால் இது குறித்த விழிப்பு உணர்வு அவசியம் என்று தோன்றியது. அதோடு அழகு என்பது தோற்றத்தில் மட்டும் தானா?
துன்பத்தில் இருப்பவருக்கு இரக்கத்துடன் உதவுவது அழகு. பரியுடன் வருபவருக்கு கருணையுடன் உணவு அளிப்பது அழகு காயப்பட்டிருந்தாலும் பிறரிடம் அமைதியாக அன்பு காட்டுவது அழகு சோர்வுற்றவர்களை அரவணைத்து ஆறுதல் கூறுவது அழகு நேர்மை தவறாமல் கம்பீரமாக இருப்பதும் அழகு. தாய்மை அழகு. சிசு அழகு, முதுமை அழகு, உண்மை அழகு..இப்படி இந்த உள்ளார்ந்த பண்புகள் இல்லாமல், வெளிப்புற தோற்றத்தில் மட்டும் இருக்கும் அழகிற்கு ஆயுள் குறைவு. அது நிலைத்தும் இருக்காது.
நரைமுடியை மறைக்காமல் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்திலேயே இருக்கும் ரஜினிகாந்த் அஜித் ரேவதி… இவர்கள் இயல்பாக இருப்பதே கூட அழகுதானே? இயல்பை ஏற்றுக்கொள்வதே உண்மையான அழகு. அழகு தலைமுடியில் அல்ல, மனதில் இருக்கிறது. இதை. உங்கள் கணவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!
