பங்குச் சந்தை திடீரென இறங்கும் போது, பல முதலீட்டாளர்கள் பயந்துபோய்விடுவார்கள். “இப்போ முதலீடு பண்ணலாமா, வேண்டாமா?”‘ என்ற குழப்பம் அவர்களுக்கு வருவது மிக மிக இயல்பான விஷயம்.
ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள் இதையே ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்ப்பார்கள். குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், இந்தச் சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி மொத்த முதலீட்டை (Lumpsum) செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கடந்த 10, 20 ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்களிடம் கொஞ்சம் பேசிப் பார்த்தால், மொத்த முதலீட்டின் மூலம் அவர்கள் அடைந்த லாபம் குறித்து புட்டுப் புட்டு வைப்பார்கள்.
பொதுவாக, பங்குச் சந்தை இறக்கத்தின்போது ஃபண்ட்களின் NAV (Net Asset Value) குறைவாக இருக்கும். இதனால், நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக யூனிட்கள் கிடைக்கும். ஆடித் தள்ளுபடி மாதிரி 20%, 30% சலுகை விலையில் நீங்கள் துணிமணிகள் வாங்குவது போலதான் குறைந்த என்.ஏ.வி-யில் யூனிட்டுகளை வாங்கலாம்.
பிறகு பங்குச் சந்தைப் புள்ளிகள் மீண்டும் உயர்ந்தால், குறைந்த என்.ஏ.வி-யில் வாங்கிய அந்த யூனிட்டுகளின் மதிப்பு கூடும். இதுவே பலர் “குறைந்த விலையில் வாங்கி, அதிகமாக விலைக்கு விற்கும்” என்று சொல்கிறார்கள்.