இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்கிறார். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி நேரத்தைக் கணக்கிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனிப் பெயர்ச்சியையொட்டி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநள்ளாறு முழுவதும் 200 சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
