தேனி: சபரிமலையில் பெய்யும் மழையின் அளவை நேரடியாக அறிந்து கொள்ள 3 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை நவ.16-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு பெய்து வரும் மழை பக்தர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெரியபாதை, புல்மேடு வழியாக வனப்பாதையில் நடந்து வரும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடுங்குளிரை எதிர்கொண்டு கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வானிலை அறிக்கையின்படி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சீதாத்தோட்டில் உள்ள வானிலை நிலையம் மூலம் சபரிமலையின் மழை அளவுகள் கணக்கிடப்பட்டது. இந்நிலையில் நேரடியாக இதன் அளவுகளை கணக்கிட கேரள மாநில மற்றும் பத்தினம்திட்டா மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவு முடிவு செய்துள்ளது. இதற்காக சந்நிதானம் அருகே பாண்டிதாவலம், பம்பையில் உள்ள போலீஸ் மெஸ், நிலக்கல் ஆகிய இடங்களில் புதியதாக மழை மானிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மழை நேரங்களில் ஒவ்வொரு மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை இதன் அளவு கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் சபரிமலை பகுதியில் பெய்யும் மொத்த மழையின் துல்லியமான அளவை நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த மூன்று மையங்களிலும் காலை 8.30 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரை 24 மணி நேர மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது.
இந்த மண்டல காலத்தைப் பொறுத்தளவில் சந்நிதானத்தில் டிசம்பர் 13-ம் தேதி அதிகபட்ச மழையாக 68 மிமீ. பதிவாகி உள்ளது.
இதுகுறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் கூறுகையில், “மழை அளவை கணக்கிட சந்நிதானத்தில் உள்ள மையத்தில் 7 பேரும், பம்பையில் 6 பேரும், நிலக்கல்லில் 6 பேரும் உள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் பணிபுரிகின்றனர். இந்த மழைப் பொழிவுகள் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் தலைமையில் தினமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.” என்றார்.