சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது.
குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது.

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது.