சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! – என்ன நடந்தது?

Spread the love

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டி.மணி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கொள்ளை வழக்கில் சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சி.பி.எம் கட்சியை சேர்ந்த கேரள தேவசம் போர்டு முன்னாள் அமைச்சரும், கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். கடகம்பள்ளி சுரேந்திரனின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக ஐகோர்ட் திருப்தி தெரிவித்திருந்தது. மேலும், விசாரணைக்காக இரண்டரை மாதங்கள் கால அவகாசமும் வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு விசாரணைக் குழு கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்திருந்தது. இன்று காலை கொச்சியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் ஆஜரான தந்திரி கண்டரரு ராஜீவரிடம் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் நெருங்கிய நட்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிலரது வாக்குமூலத்திலும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரி கண்டரரு ராஜீவருக்குமான பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து விசாரணை முடிவில் தந்திரி கைதுசெய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *