சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.
மேலும், அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றார் உன்னிகிருஷ்ணன் போற்றி. ஹைகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறி தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த கவசங்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டன.
அப்போது அந்த தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு ஏற்கனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் ஆவியாகிவிட்டதா என ஹைகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) அமைத்தது ஹைகோர்ட். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பொதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதிந்தது.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தங்கம் சரியாக பராமரிக்காதது, அலுவலக புத்தகத்தை சரியாக பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் முராரி பாபு அக்டோபர் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். முன்னாள் எக்ஸிகியூட்டி ஆப்பீசர் சி.சுதீஷ்குமார் கடந்த நவம்பர் 1-ம் தேதியும், முன்னாள் திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ நவம்பர் 6-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு நவம்பர் 11-ம் தேதி கைதானார்.
தொடர்ந்து முன்னாள் தேவசம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் நவம்பர் 20-ம் தேதி கைதானார். முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் எஸ்.ஸ்ரீகுமார் டிசம்பர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். செம்புகவசத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த தங்கத்தகட்டை தனியாக பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி கடந்த டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனும் அதே டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நகைக்கடையில் இருந்து சுமார் நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் டிசம்பர் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஜனவரி 9-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடைசியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் நேற்று முன்தினம் (ஜனவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார்.