உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அரிசி, கோதுமை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். உங்கள் உணவில் 15 முதல் 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும்.
நார்ச்சத்து இருக்க வேண்டும். நீரிழிவைப் பொறுத்தவரை என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் கஞ்சி குடித்தால் உடனே அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும், உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். இது சிறுதானியங்களுக்கும் பொருந்தும். கேழ்வரகு, கம்பு என எதையும் மாவாக்கி, கஞ்சியாகத் தயாரிக்கும்போது அதிலுள்ள நார்ச்சத்து அழிகிறது.

கம்பு, கேழ்வரகு, சாமை என அத்தனை சிறுதானியங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவை. காரணம் அவற்றிலுள்ள நார்ச்சத்து. அந்த நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால் கஞ்சியாக மாற்றாமல் குருணையாக உடைத்து உப்புமா, கிச்சடி போன்றோ முழுத் தானியங்களாக சமைத்து சாதம்போல சாம்பார், ரசம் ஊற்றியோ சாப்பிடுவதுதான் சரியானது.
அரிசி, கோதுமை என இரண்டிலும் ஒரே அளவுதான் சர்க்கரைச்சத்து இருக்கும். எனவே, சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என நினைக்காதீர்கள். பச்சரிசியில் நார்ச்சத்து மிகக்குறைவு. புழுங்கல் அரிசியில் அது ஓரளவு அதிகம்.
கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பர்ய அரிசி வகைகளில் நார்ச்சத்து மிக அதிகம். அதற்காக அவற்றையும் அளவுக்கு மீறி எடுக்கக்கூடாது. கிழங்கு வகைகள் தவிர்த்து, நிறைய காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.