சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: “மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியதோடு, சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராகப் பேராசிரியர் வசந்தி தேவி திகழ்ந்தார்.
தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’-ன் தீமைகள் குறித்தும் மிகத் தீவிரமான பரப்புரையை அவர் மேற்கொண் டிருந்தார். பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும் உறுதியாகத் தனது கருத்துகளை முன்வைத்து வந்தார். அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்க வேண்டும் என இறுதிமூச்சு வரையில் போராடி வந்த வசந்தி தேவி, கல்வியானது மாநிலப் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தவர் ஆவார்.
கல்வியில் மதவாதம், வியாபாரம், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்தார். கல்வித் தளத்தில் மட்டுமல்லாது பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடிய செயற்பாட்டாளர் வசந்தி தேவி. நமது திராவிட மாடல் அரசு பள்ளிக் கல்வித் துறையில் தொடங்கிய கலை வகுப்புகள், தேன்சிட்டு சிறார் இதழ் உள்ளிட்ட முன்னெடுப்புகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியும் ஊக்கப்படுத்தியவர்.
அவரது திடீர் மறைவு கல்வித் துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டுக் களத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கல்விப் புலத்தைச் சேர்ந்த அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: “தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், போராளியுமான முனைவர் வே.வசந்தி தேவி (87) இன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். முனைவர் வசந்தி தேவி நாட்டுப்பற்றுக் கொண்ட குடும்ப வழி வந்தவர். திண்டுக்கல் நகரத்தில் பிறந்தவர். அங்கு பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி பெறுவதற்கு சென்னை வந்தவர்.
தேச விடுதலைப் போராட்ட வீரரும், தொழிலாளர்கள் நலன் காக்க முதன் முதலாக தொழிற்சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் முதன்மையாக விளங்கியவருமான தியாகி சர்க்கரை செட்டியார் மகள் வழி வாரிசான முனைவர் வே.வசந்தி தேவி, கல்லூரி துணைப் பேராசிரியர் தொடங்கி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியது வரை உயர் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்து, மேம்படுத்தியவர்.
இடதுசாரி இயக்கங்களின் இயல்பான தோழமை உறவில் இறுதி வரை இருந்தவர். அடித்தட்டு மக்களின் அழைப்பை மறுக்காமல் ஏற்று, அவர்களது நிகழ்வுகளில் பங்கேற்று ஆதரவு காட்டியவர். கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் முதல் பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என யார் பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக போர்க் குரல் எழுப்பியவர். களமிறங்கி போராடி வந்தவர். தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர்.
சாதி, மத வெறுப்பும், பிளவுகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இல்லாத சமூக சமத்துவ சிந்தனைகளை எழுத்துக்களிலும், பேச்சிலும் தொடர்ந்து விதைத்து வந்தவர். அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயக நெறிகளும் வகுப்புவாத, பாசிச தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பேராபத்தான சூழலில், மதச்சார்பற்ற ஜனநாயக பாதுகாப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த வசந்தி தேவியின் மறைவு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்” என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: “தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளராக, பெண்ணுரிமை போராளியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த டாக்டர் வசந்தி தேவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் வசந்தி தேவி ராணி மேரிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கி, பின்னர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், மனோன்மணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திறம்பட பணியாற்றிவர். ஆசிரியர் இயக்கம், பெண்கள் இயக்கம், கல்வி உரிமை என பல்துறைகளில் அயராது உழைத்தவர். “பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பை துவக்கி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தியவர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய காலத்தில் பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர் திருத்தத்தில் அயராது பாடுபட்டவர். சர்க்கரை செட்டியாரின் பேத்தியான டாக்டர் வசந்தி தேவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவாளராக விளங்கியவர். இடது சாரி இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வலுவாக குரலெழுப்பியவர். அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கும், கல்வி சார்ந்த அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.