சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Dinamani2f2025 04 062ff9nyjkpl2fsamayapuram.jpg
Spread the love

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி, இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம்மாறி,சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாதவாறும் சகல செளபாக்கியங்களும் கிடைக்க , அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிப் பெரும் சிறப்பாகும்.

amman
சமயபுரம் மாரியம்மன்.

இத்தகைய சிறப்புமிக்க பச்சைப் பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் ( கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி ஐந்தாம் திருநாள்), அழித்தல் ( திருத்தேர் பத்தாம் திருநாள்), மறைத்தல் (முத்துப்பல்லக்கு உற்சவம் பனிரெண்டாம் திருநாள்), அருள்பாலித்தல் ( தெப்பம்பதிமூன்றாம் திருநாள்) இந்த ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாள்களில், இங்கு அம்மன் அருள் புரிந்து வருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூலவர் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.30 மணி மணியளவில் உற்சவ அம்பாள் மஞ்சள் மாலையுடன் கேடயத்தில் புறப்பாடகி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

இதனையடுத்து கொடிமரத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு காலை 7.45 மணி அளவில் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேடயத்திலும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மர சிம்ம வாகனம், மர பூத வாகனம், மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மர யானை வாகனம், மர சேஷ வாகனம், மரக் குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

வரும் ஏப்.14ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.15ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்.16ம் தேதி வெள்ளி காமதேனு வாகனம், ஏப்.17ம் தேதி முத்துப் பல்லக்கும், ஏப்.18ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது

இந்நிகழ்வில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர்கள் பெ. பிச்சை மணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன், மணியக்காரர் பழனி, ச.கண்ணனூர், பேரூராட்சி தலைவர் ப.சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… நல்லதைச் சொல்வது தப்பா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *