சமரச தீர்வு மையம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு: விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்கிய நீதிபதிகள் | Judges distribute pamphlets to raise awareness

1357619.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட, தாலுகா அளவில் சமரச தீர்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூர்வமாக, வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதற்காக, முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர் சமரச தீர்வாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீர்வு மையம் கடந்த 2005 ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரச தீர்வு மையங்களும், 146 தாலுகா அளவிலான சமரச மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சமரச மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் தொடக்க நிகழ்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்பிளனேடு நுழைவுவாயில் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், சமரச மையத்தின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தர், சமரச மைய கமிட்டி உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுதர்சனா சுந்தர், பழனிவேலு, அல்லி உள்ளிட்ட சமரச தீர்வாளர்கள், தமிழ்நாடு சமரச தீ்ர்வு மைய இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் டி.ரமா, உதவி பதிவாளர் கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *