இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழகம், அந்த ஓவியம் இந்தியக் கலைஞர் ஒருவரால் (அனிருத் சாய்நாத்) மகாபாரதத்தில் கிருஷ்ணரின் லீலைகளைக் குறிக்கும் வகையில் `மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ்’ (Master of Puppets) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது என்றும், அது தவறான புரிதலுக்கு வழிவகுத்ததற்காக வருந்துவதாகவும் தெரிவித்தது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகளைத் தவிர்க்க உட்புற ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வெறும் ஒரு மொழிப் பாடமாக மட்டும் பார்க்கப்படாமல், ஆசியாவின் அறிவுசார் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாகக் கற்பிக்கப்படுகிறது. ஹார்வர்டில் சமஸ்கிருதம் 1872-ஆம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்போடு ஹார்வர்டில் தனித் தமிழ் இருக்கை (Tamil Chair) உருவாக்கப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் வெறும் மொழியாக மட்டுமல்லாமல், உலகத் தரத்திலான ஒரு செவ்வியல் ஆராய்ச்சித் துறையாகவும் வளர்ந்து வருகிறது.