போலீஸ் வேன் உள்பட பல வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், பாதுகாப்புப் படையினர் அமைதியை மீட்டெடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
இந்த வன்முறை சம்பவத்துக்கு சமூக ஆர்வலரான சோனம் வாங்க்சுக் மீது குற்றஞ்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், “அவரது உண்ணாவிரதமும், அவரின் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய பேச்சுகளும் இளைஞர்களைத் தூண்டிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் பாஜக மற்றும் அரசு அலுவலகங்களை அவர்கள் தாக்கினர்” என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 2021-22 ஆம் ஆண்டில், சோனம் வாங்க்சு, அவரது அமைப்பின் வெளிநாட்டு நிதி பங்களிப்பு கணக்கில் ரூ.3.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். இதில், சட்டப்பிரிவு 17 -ஐ மீறியுள்ளதாகவும், 2020-21 ஆம் ஆண்டுகளில் 3 பேரிடமிருந்து ரூ.54,600 வெளிநாட்டு நிதி பங்களிப்பில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதையும் மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், உணவுப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை போன்ற பிரச்சினைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் மூலம் ஸ்வீடனில் இருந்து சுமார் ரூ.4.93 லட்சம் வெளிநாட்டு நிதி பெறப்பட்டதையும் மத்திய உள் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இதனாலேயே அவரது லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கத்தின் வெளிநாட்டு நிதிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சோனம் வாங்க்சுக், இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இதுபோன்ற நிதி முறைகேடுகள் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.