பள்ளி, கல்லூரி மாணவர்களின் விடுதிகளின் பெயர்களை சமூக நீதி விடுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற ஒரு நகைச்சுவை தான் சமூக நீதி விடுதி பெயர் மாற்றம்.
ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக அரசு விடுதிகளைத் தரம் உயர்த்தாத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும்வேளையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக பெயர் மாற்று அரசியலை செய்வது கண்டனத்துக்குரியது.
சமூக நீதி என்பது பெயரில் இருப்பதைவிட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது.
தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை. பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின்கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை சமூகநீதி விடுதிகள் என்ற ஒரே குடையின்கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பரத் திட்டம் அபத்தமானது. இது முழுக்க முழுக்க அரசியல்ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி.
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, போதிய ஆசிரியர்கள், குடிநீர், கழிப்பறை, தரமான உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, அவற்றின் பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.