“சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களுமே முக்கிய காரணம்” – நீதிபதி டி.கிருஷ்ணகுமார் | Lawyers courts are main cause of social change Justice Krishnakumar

1318294.jpg
Spread the love

சென்னை: சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் முக்கிய காரணம் என பட்டரைப்பெரும்புதூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியி்ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீ்திபதி டி.கிருஷ்ணகுமார் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பங்கேற்று சட்ட மாணவ, மாணவியருக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசுகையில், ‘‘நானும் சென்னை சட்டக்கல்லூரியின் பழைய மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். சென்னை சட்டக்கல்லூரியில் படித்த பலர் குடியரசுத் தலைவர் முதல் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளனர்.

இந்தக் கல்லூரியில் படித்த 13 பேர் சமீபத்தில் சிவில் நீதிபதிகளாக தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர். இளம் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களை தேர்வு செய்து அவர்களிடம் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் முக்கிய காரணம். நேர்மை, ஒழுக்கம், பொறுமை, கடின உழைப்பு இந்த நான்கும் இருந்தால் வழக்கறிஞர் தொழிலில் கொடி கட்டிப் பறக்கலாம், என்றார்.

தமிழக அரசின் சட்டத்துறைச் செயலர் எஸ். ஜார்ஜ் அலெக்ஸாண்டர் பேசுகையில், தமிழகம் முழுவதும் சட்டக் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சட்டத்துறை அமைச்சர் இன்னும் சில தினங்களில் அறிவிப்பார். 728 சட்ட மாணவர்களுக்கும், ஆயிரத்து 771 சட்ட மாணவிகளுக்கும் தமிழக அரசின் திட்டம் மூலமாக மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்கள் தினமும் செய்திதாள்களை படித்து சட்டம் தொடர்பான உலகறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்த மூத்த வழக்கறிஞர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கட்டணம் வாங்குகின்றனர் என்றால் அந்த நிலைக்கு நீங்களும் உயர வேண்டும், என்றார்.

சட்டக்கல்வி இயக்கக இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி பேசுகையி்ல், பட்டரைப்பெரும்புதூரில் ஏற்கெனவே 3 ஆண்டு சட்டப்படிப்பு மட்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு முதல் 5 ஆண்டு சட்டப்படிப்பும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சட்டத்துறையிலும், உயர் நீதிமன்றத்திலும் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மொத்தம் 759 இளங்கலை பட்டதாரிகளுக்கும், 163 முதுகலை பட்டதாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பட்டரைப்பெரும்புதூர் சட்டக்கல்லூரி முதல்வர் என். கயல்விழி தலைமையில் பேராசிரியர்களும், நிர்வாகப் பணியாளர்களும் செய்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *