சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் | HC orders no restriction on persons with disabilities applying for the post of cooking assistant

1348706.jpg
Spread the love

மதுரை: சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 979 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ல் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் தொகுப்பூதியம் அடிப்படையில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. சமையல் உதவியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வது, உணவு தயாரிப்பின் போது உதவுவது, காய்கறிகளை வெட்டிக் கொடுப்பது, பாத்திரங்களை கழுவுவது, உணவு பரிமாறுவது போன்ற பணிகளைச் செய்வர். இதனால் இப்பணிக்கு மாற்றுத்திறனாளிகளை தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாதனைகளைச் செய்து வரும் சூழலில், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கக்கூடாது எனக் கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய சூழலில், மாற்றுத் திறனாளிகளை பணிக்கு தேர்வு செய்ய மறுப்பது சட்டவிரோதமானது.

எனவே சமையல் உதவியாளர் தேர்வு தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்தும், அந்த அரசாணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று (ஜன.28) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமையல் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையில் சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக தமிழக சத்துணவுத் துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *