ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பயி சோரனுடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பயி சோரன் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி, அவரது பாதையை அவரே தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரால் சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதாகவும் சம்பயி சோரன் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், சம்பயி சோரனுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“சம்பயி சோரன் ஒரு புரட்சியாளர். எக்ஸ் பதிவின் மூலம் அவரது வலி தெரிகிறது. அவர் மன ரீதியில் உடைந்துள்ளார். சில நாள்கள் முதல்வராக இருந்த அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரை முதல்வராக சுதந்திரமாக செயல்பட விடவில்லை. சிறையில் இருந்து வரும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது என்பது அவரது பதிவு காட்டுகிறது.
சம்பயி சோரன் போன்ற மூத்த தலைவர் கட்சியில் இருந்து விலகினால், அது கட்சியைதான் பாதிக்கும்.
2020-இல் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜேஎம்எம் கட்சியில் வேறு எந்த தலைவராலும் முன்னுக்கு வரமுடியவில்லை. சம்பயி சோரன் போன்று பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், ஹேமந்த் சோரன் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகிறார். சம்பயி சோரனின் மனவேதை தற்போது வெளிவந்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சம்பயி சோரன் வெளியிட்ட பதிவில்,
“கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் முதல்வராக நான் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தபோது, ஜூலை 3-ஆம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதுவரை அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் நிகழ்ச்சியை மற்றொருவா் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யுமாறு என்னிடம் கூறினா். நான் அதிா்ச்சியடைந்தேன். எனக்கு பதவி ஆசை இல்லாததால், உடனடியாக ராஜிநாமா செய்தேன். எனினும், எனது சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், அவர் (ஹேமந்த் சோரன்) முதல்வா் நாற்காலியில் மட்டுமே ஆா்வம் காட்டினாா்.
எனது முழு வாழ்க்கையையும் அா்ப்பணித்த கட்சியில் எனக்கு உரிய இடம் இல்லை என்பதை உணா்ந்தேன். இதுபோன்று, நான் எதிா்கொண்ட பல்வேறு அவமானங்களால், மாற்றுப் பாதையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மூன்று வாய்ப்புகள் என்வசம் உள்ளன. அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது” என்று குறிப்பிட்டுள்ளார்.