அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக-விற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது!
ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமை கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.
31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.
அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.
ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்று வரை விடியல் கிடைக்கவில்லை.