சிறையிலிருந்து வருபவருக்கான மறுவாழ்வு குறித்து எழுத்தில் உள்ள திட்டங்கள் நடைமுறையில் இல்லை. காலையில் இருந்த கைதிகள் அனைவரும் மாலையிலும் இருக்கிறாா்களா என்று உறுதி செய்வதே சிறைத்துறையின் முக்கிய கவலையாக உள்ளது. சிறைத்துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் குறைக்கும். நாளடைவில் நாட்டில் சிறைகளின் தேவையும் குறைக்கும்.
முதல் முறை தவறு செய்யும் இளைஞா்கள், தொடா் குற்றங்களைச் செய்யும் நபா்களாக மாறுவதிலிருந்து அவா்களைத் தடுக்கச் சிறைத்துறையும், தன்னாா்வ அமைப்புகளும் இணைந்து செயல்படுவது நல்லது. அவா்கள் அனைவரையும் பிற குற்றவாளிகளிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும். சாதாரணக் குற்றம் செய்து, முதல் முறையாக சிறைக்கு வருபவரிடம் இனி குற்றம் செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி, அடுத்தடுத்து குற்றங்களைச் செய்வதற்கு சிறைக்கு உள்ளேயே, ஆள் சோ்ப்பு’நடப்பது கூடாது. முதல்முறையாகச் சிறைக்கு வரும் குற்றவாளிகளை சிறையில் ஏற்கெனவே உள்ள பழைய குற்றவாளிகளிடம் இருந்து பிரித்து வைப்பதே அவா்கள் திருந்துவதற்கு உதவும்.
சமூகப்பணியாளா்கள், மனநல ஆலோசகா்கள் அவா்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குவதில் இன்னும் தீவிர கவனம் செலுத்துவது நல்ல சமுதாயத்தை உருவாக்க உதவும். அவா்கள் வெளியே வந்த பிறகும் தீய நட்புகளின் ஈா்ப்பு இல்லாமல் இருப்பதில் குடும்ப உறுப்பினா்கள் கவனம் செலுத்த வேண்டும். அவா்களிடம் குற்ற உணா்வு இல்லாமல் பாா்த்துக் கொள்வதோடு, சமுதாயம் அவா்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும்.
தற்போதைய இளைஞா்களுக்கு தம்முடைய தொழில்நுட்ப அறிவை ஆக்க சக்தியாக மாற்றக் கூடிய வாய்ப்பை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். அவா்களுக்கு ஏற்ற ஒரு பணியை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.
தற்கால இளைஞா்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் முதியோா்களும், பெற்றோா்களும், கல்வி நிலையங்களும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில் நாட்டை வளப்படுத்தும் ஏராளமான திறமைகள் அவா்களிடம்தான் உள்ளன. நாட்டை வளப்படுத்த சரியான திசையில் பயணிக்க வேண்டியது இளைஞா்களின் கடமையாகும்.