சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பலமடங்கு மின்கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மீட்டரின் டிஸ்பிளே பழுதாகி இருந்ததாகவும், அப்படி இருக்கும்பட்சத்தில் கடந்த முறை வந்த மின் கட்டணத்தையே செலுத்தவே அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் கணக்கீட்டாளர் தானாக அளவீடுகளை குறிப்பிட்டதால் அதிகமான கட்டணம் வந்துள்ளது.
இதையடுத்து அந்த கணக்கீட்டாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு சரியான மின் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் சரியான நேரத்தில் மின்இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மின் வாரிய பணியாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆய்வுக் கூட்டங்களின்போது மின்இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் வருகின்றன. வீட்டு இணைப்பு, வணிக மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கான இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் குறை இருந்தால் அதனை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல், நுகர்வோருக்கு உதவி செய்து பணிகளை முடிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் விண்ணப்பங்களும் முடிக்கப்படாமல் இருப்பதாக குற்றாச்சாட்டு உள்ளது. அதனை விரைவாக சரி செய்ய வேண்டும். மேலும் அமலாக்க பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது ஒரு சில இடங்களில் ஒழுங்கின்மை கண்டுபிடிக்கப்படுட்டுள்ளது. இதனால் வாரியத்துக்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது. பணியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.