சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் “எம்.வி.கான் 2026′ (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க ‘எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஃப்.டி.ஐ (CFTI) சென்னை பிரிவின் இயக்குனர் திரு. முரளி கே. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார்.

டாக்டர் ஏ.வி. அனூப்பின் நெகிழ்ச்சியான ஏற்புரை:
விருதினைப் பெற்றுக்கொண்டு டாக்டர் ஏ.வி. அனூப் பேசியதாவது
“கடந்த மாதம் டாக்டர் விஜய் விஸ்வநாதன் என்னை அழைத்து, இந்த நீரிழிவு மாநாட்டில் எனக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுவதாகக் கூறியபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது, ஏனெனில் இது நீரிழிவு தொடர்பான மாநாடு. ஆனால், ஆயுர்வேதம் உட்பட பல்வேறு துறைகளில் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எம்வி டயாபெட்டிக்ஸ் (MV Diabetes) உடனான எனது தொடர்பு பல தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கியது. எனது சித்தப்பா 1954-ல் இந்த கிளினிக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே டாக்டர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்று வந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இங்கே சிகிச்சை பெற்றார். அதனால் இந்த நிறுவனத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் (Allopathy) ஆகியவற்றை எதிரெதிராகப் பார்க்காமல், அவற்றை ஒருங்கிணைத்துப் பார்ப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.