சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி சுமார் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் நெல்லை மாவட்டம் பாரத் ரைபிள் கிளப்பிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட ஏர் பிஸ்டல் பிரிவில் ஏழு வயதையுடைய காவ்யா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
பதக்கம் வென்ற மாணவி காவ்யா யாதவ் வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார்.
மாணவி காவ்யா யாதவ் அவர்களை லிட்டில் பிளவர் சிபிஎஸ்இ பள்ளியில் உற்சாகத்தோடு சந்தித்தோம், மகிழ்ச்சியோடு அவர் நம்மோடு உரையாடிய போது,
” நான் காசியாபாத்தில் நிகழ்ந்த தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன். வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய அப்பா ஆவின் பால் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை முழுவதுமாக வழங்குவது என் அப்பா தான். தினமும் ஒரு மணி நேரம் அப்பா எனக்கு பயிற்சி அளிப்பார். நான் தற்போது மே மாதம் பூடானில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்” என்று தன் மழலை பேச்சின் உற்சாகத்தோடு பேசி முடித்தார் .