சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் ‘மாற்றுபூமி’ படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தொடக்கத்தில் இம்மாத ரிலீஸாகதான் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பில் தாமதமானதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போயிருக்கிறது.

இத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. ‘வாரிசு’ படத்தின் இயக்குநர் வம்சிதான், சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
‘வாரிசு’ படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த இயக்குநர் வம்சி, தற்போது சல்மானை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார்.
இப்படத்தை தெலுங்கு திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ‘வாரிசு’ திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ‘ஜவான்’ திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் பாலிவுட் திரைப்படம் இது. இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் வம்சி, “சல்மான் கான் சாரை வைத்து என்னுடைய அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.
இந்தப் படம் முழு மனதுடனும் உறுதியான நம்பிக்கையுடனும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.