பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீதான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை முயற்சிக்கான காரணம் என்ன
பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது; இந்த வகை மான்களுக்கு பிஷ்னோய் சமூகத்தினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்த நிலையில், 1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சல்மான் கான், செப். 28 ஆம் தேதியில் பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில், பின்னர் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றிருந்தார், சல்மான் கான்.
இந்த சம்பவத்திலிருந்துதான், சல்மான் கானுக்கும் பிஷ்னோய் இனத்தவர்களுக்கும் மோதல் தொடங்கியது. பிளாக்பக் மான்களை சல்மான் கான் வேட்டையாடியது, பிஷ்னோய் இனத்தவர்களை சுமார் 25 ஆண்டுகளாகக் காயப்படுத்திக் கொண்டிருப்பதாக, பிஷ்னோய் இனத்தலைவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். சல்மான் கான் மன்னிப்பு கோரினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார்.